டிசம்பர் 23|மார்கழி 08
தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில் ஆதரவற்றும் ஏழ்மையில் இறந்தோர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவையை மை தருமபுரி தொண்டு நிறுவனம் அமைப்பினர் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகின்றனர். தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் இறந்துள்ளார். அதேபோல் மொரப்பூர் அருகே சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் வாகன விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இவர்களுக்கு உறவினர்கள் இல்லை என்பதை அறிந்து மை தருமபுரி அமைப்பினர் தங்கள் உறவாக எண்ணி இரண்டு முதியவர்களின் புனித உடல்களையும் இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். மொரப்பூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மாணிக்கவாசகன், காவலர் சிலம்பரசன், தொப்பூர் காவலர் அறிவழகன் மை தருமபுரி நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, தன்னார்வலர்கள் கணேஷ், கார்த்திக் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். மை தருமபுரி அமரர் சேவை மூலம் இதுவரை 183 புனித உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர்.

