ஏப்ரல் 14, கன்யாகுமரி
கன்னியாகுமரியில் சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது தொண்டர் தூக்கி எறிந்த பூப்பந்தை வெடிகுண்டு என நினைத்து பதறியடித்துக் கொண்டு விஜய் கேரவனுக்குள் ஓடினார் என ஒரு வீடியோ பரவி வருகிறது. இதன் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய், கன்னியாகுமரி மாவட்டத்தில் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். மகாதனபுரம் ரவுண்டானாவிலிருந்து ஜீரோ பாயிண்ட் வரையிலான பாதையில் அவர் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் சைக்கிள் ஓட்டினார். இந்தப் பிரசாரத்தின்போது, ஒரு ரசிகர் மலர்களை பந்தாக உருட்டி விஜய் நோக்கி வீசினார். அது அவரருகே வெடித்து பூக்களாக சிதறியது. இதனால் திடுக்கிட்ட விஜய், சைக்கிளை விட்டு கீழே இறங்கி வேகமாக தனது கேரவனுக்குள் ஓடினார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை சூழ்ந்துகொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதும் பலரும் திகைப்பும் சர்ச்சையும் கிளம்பியது. இந்த வீடியோவை தமது சோஷியல் மீடியா பக்கத்திலிருந்து தவெக நீக்கியது.
ஆனால் அதற்கு முன்பே வீடியோ வைரலாகிவிட்டதால், அது எங்கும் பரவி மீம்களாகவும் விவாதமாகவும் மாறியது. விஜய் செய்த செயலால் அந்த பூப்பந்தை வீசிய நபரே சற்று குழம்பிவிட்டார். இதுகுறித்து தவெகவினர் சிலர் கூறுகையில், "2025 ஆம் ஆண்டு கரூரில் தவெக பேரணியில் நடந்த நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்ததால், பாதுகாப்பு குழு மிகவும் கூர்ந்த கவனத்துடன் உள்ளது என்று TVK ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டம் அதிகமாகி 'பஃபர் ஜோன்' தாண்டியதால், மீண்டும் கரூர் போன்ற நிலை வரக் கூடாது என்று நினைத்த பாதுகாப்புக் குழு, விஜய்யை உடனடியாக சைக்கிளிலிருந்து இறக்கி கேரவனுக்கு அழைத்துச் சென்றது என்பதே உண்மை நிலவரம். மற்றபடி வெடிகுண்டு என்றெல்லாம் நினைத்து விஜய் ஓடவில்லை" என்கிறார்கள். தவெக தலைவர் விஜய்யின் பேரணிகள் சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு மிகப்பெரும் கூட்டத்தை ஈர்க்கின்றன; ஆனால் அதே நேரத்தில் அவை பலமுறை குழப்பங்களும் பாதுகாப்பு கவலைகளும் உருவாகும் இடங்களாகவும் மாறுகின்றன.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் மீம்களாகவும் நகைச்சுவையாகவும் பரவும் அதே வேளையில், விஜய்யின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த தீவிரமான விவாதங்களையும் எழுப்பியுள்ளன. தேர்தல் வேட்டை தீவிரமடையும் நிலையில், தலைவர் விஜய்யின் சைக்கிள் பிரசாரம் தொடர்கிறது.

