டிசம்பர் 17|மார்கழி 02
திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரம் மிக பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து அடுத்தடுத்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நீதிபதி ஜி ஆர் சுவாமி நாதன் திருப்பரங்குன்றம் மலை மீது உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என உத்தரவை ஏற்று, தமிழக அரசு கார்த்திகை தீபம் தூணில் தீபம் ஏற்றி இருந்தால், அத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்து இருக்கும், அடுத்தடுத்து அவரவர் வேலையை பார்க்க சென்றிருப்பார்கள்.
ஆனால் நீதிமன்ற உத்தரவை உதாசீன படுத்திவிட்டு, கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்காத திமுக அரசை கண்டித்து மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் ஏற்பட்டது. மேலும் தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதனை விமர்சனம் செய்து வருகிறது திமுக தரப்பு. இதில் உச்சகட்டமாக நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக எம்பிக்கள் டெல்லியில் இருந்து கொண்டு குரல் கொடுக்க இந்தியா அளவில் திருப்பரங்குன்றம் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 107 எம்பிக்கள் கையெழுத்திட்ட மனு லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், ஹேமந்த் குப்தா, மேலும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் சுப்ரமணியன், சிவஞானம், சுதந்திரம் உள்ளிட்ட மொத்தம் 56 முன்னாள் நீதிபதிகள் கையெழுத்திட்டுஒருங்கிணைந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
திமுக உட்பட இந்தி கூட்டணி எம்பிக்கள் கொண்டு வந்துள்ள நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் ஜனநாயகத்துக்கும் இந்திய அரசியலமைப்புக்கும் எதிரானது என உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் 56 பேர் கடுமையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்கள்.
மேலும் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கை என்பது, ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவின் சித்தாந்தங்களுக்கும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கும் ஒத்துப்போகாத நீதிபதிகளை அச்சுறுத்தும் வெட்கக்கேடான முயற்சி என தெரிவித்துள்ள முன்னாள் நீதிபதிகள், இத்தகைய நடவடிக்கைகள் தொடர அனுமதிக்கப்பட்டால், அது நமது ஜனநாயகத்தின் வேர்களையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் அழிக்கும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.
மேலும், எம்பிக்கள் முன்வைத்த காரணங்கள் மேலோட்டமானவை மட்டுமே என்றும், பதவி நீக்கம் போன்ற அரிய, விதிவிலக்கான மற்றும் தீவிரமான அரசியலமைப்பு நடவடிக்கைக்கு அவை எந்த வகையிலும் போதுமானவை அல்ல என்றும் முன்னாள் நீதிபதிகள் கூறியுள்ளனர். அவசர நிலை காலத்தில்கூட, அப்போதைய அரசு எல்லையை மீற மறுத்த நீதிபதிகளை நேரடியாக பதவி நீக்கம் செய்யாமல் வேறு வழிகளை நாடியது என்பதை சுட்டி காட்டி இருக்கும் நீதிபதிகள்.மேலும் பதவி நீக்க நெறிமுறையின் நோக்கம் நீதித்துறையின் நேர்மையை பாதுகாப்பதே தவிர, அதை அரசியல் பழிவாங்கும் கருவியாக மாற்றக் கூடாது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதிகள்.
மேலும் நீதிபதிகளை, தங்களது அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வைப்பதற்காக பதவி நீக்கம் என்ற அச்சுறுத்தலை பயன்படுத்துவது, அரசியலமைப்பு பாதுகாப்பையே மிரட்டும் செயலாகும் என்றும், இத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புக்கும் முழுமையாக எதிரானது என்றும் முன்னாள் நீதிபதிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு நீதியரசர் ஜி ஆர் சுவாமிநாதனுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.

