நவம்பர் 25|கார்த்திகை 09
மீனவர் நலனுக்கான கட்சி, அமைப்புகளில் சேர உள்ளதாக நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள் தெரிவித்துள்ளார். மீண்டும் திராவிடக் கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ள காளியம்மாள், விரைவில் எந்தக் கட்சியில் இணைவேன் என்பதை கூற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை மாவட்டத்தில் போட்டியிட்ட காளியம்மாள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்றார். நாதகவில் சீமானுக்கு பின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய முகங்களில் காளியம்மாளும் ஒருவராக இருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் நாதக சார்பாக அறியப்பட்ட முகமாக காளியம்மாள் வலம் வரத் தொடங்கினார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு சீமான் மற்றும் காளியம்மாள் இடையில் மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக நாதக நிகழ்ச்சிகளில் காளியம்மாள் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இதனிடையே நாதக மேடையிலேயே காளியம்மாளை விமர்சித்து சீமான் பேசத் தொடங்கினார்.
இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் காளியம்மாள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதன்பின் காளியம்மாள் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். திமுக தரப்பில் அழைக்கப்பட்ட போது, அவர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்டதாக கூறப்பட்டது. இதனால் திமுக தரப்பில் மீண்டும் அணுகப்படவில்லை.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், காளியம்மாள் எந்தக் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மத்தியில் காளியம்மாளுக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. இவரை தவெகவில் இணைக்கவும் சில முயற்சிகள் நடப்பதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ராமேஸ்வரம் அருகே பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர் ஒருங்கிணைப்பு குழு சார்பாக உலக மீன்வர் தின விழா நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களை சந்தித்து காளியம்மாள் பேசுகையில், தமிழ்நாட்டை ஆண்ட திராவிட கட்சிகள் மீனவ மக்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் புறக்கணித்து வருகின்றன.
மீனவர்களுக்கு வழங்கிய சுனாமி வீடுகளை தமிழக அரசு புதுப்பிக்கவில்லை. கடற்கரை ஓரங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கி மீனவர்களை அப்புறப்படுத்த பார்க்கின்றனர். வரும் காலங்களில் மீனவ அமைப்புகளை ஒன்றிணைத்து மீனவர்கள் நலனுக்காக தொடங்கப்படும் அமைப்பு அல்லது கட்சியில் என்னை இணைத்து கொண்டு மீனவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
- காளியம்மாள்

