Type Here to Get Search Results !

பாலக்கோடு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெற்று கையும் கழவுமாக சிக்கினார்

Arun Kumar J

பாலக்கோடு செப்டம்பர் 24 |புரட்டாசி 08



குழந்தை திருமண விவகாரத்தில் கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க சிறுமியின் தாயாரிடம் பெண் இன்ஸ்பெக்டர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியுள்ளார்.


தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் நிர்மல்குமார். இவர், 16 வயது சிறுமியை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமியை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது தான் சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்துள்ளதும், அதில் அந்த சிறுமி கர்ப்பமானதும் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது.


இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறையினர் மருத்துவமனையில் விசாரித்து, பாலக்கோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் (50 வயது) சிறுமியின் குடும்பத்தினரை அழைத்து விசாரித்தார். அப்போது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கைது செய்யாமல் இருக்க ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் இது பற்றி தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் நேற்று புகார் தெரிவித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில், ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை பாலக்கோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் வீரம்மாளிடம், அந்த சிறுமியின் தாயார் கொடுத்தார்.


அப்போது அங்கு மறைந்திருந்த தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாளை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களை பற்றி

மின்வாரிய செய்திகள், பொது வேலைவாய்ப்பு, பொது நிகழ்வுகள், அரசியல், ஆன்மீகம், தினம் ஒரு ‌ தகவல் உள்ளிட்ட பல்வேறு விதமாக நிகழ்வுகளை ஒரே தளத்தில் பொதுமக்களும் அறிந்துகொள்ளும் விதமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.