தருமபுரி பொ.மல்லாபுரம் செப்டம்பர் 24 | புரட்டாசி 08
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் முத்தம்பட்டி, வத்தல்மலை, மூக்கா ரெட்டிபட்டி, பூத நத்தம், சித்தேரி, காளிபேட்டை, பொ.மல்லாபுரம், பையர்நத்தம் ஆகிய 8 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பொ.மல்லாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு பொ.மல்லாபுரம் பேரூராட்சி, திப்பிரெட்டிஅள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மருத்துவமனையை நம்பி உள்ளனர். சேலம், தர்மபுரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் இந்த அரசு மருத்துவமனையில் 3 மருத்துவர்கள், 3 செவிலியர்கள் மட்டும் உள்ளனர். மருத்துவர்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே பணியில் ஈடுபடுகின்றனர். பின்னர் மாலை 4 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை மருத்துவர்கள் இல்லை. இதற்கு பதிலாக செவிலியர்களே பணியை கவனிக்கின்றனர் இதற்க்கு முக்கிய காரணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்படாததால் அரசு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவில்லை என கூறப்படுகிறது.
பொ.மல்லாபுரம் பேரூராட்சி 2 மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளதால் சேலம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் இங்கு அதிக அளவில் வருகின்றனர். மேலும் வத்தல்மலை அடிவார பகுதியில் மருத்துவமனை உள்ளதால் விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டு இரவு நேரத்தில் மக்கள் அரசு மருத்துவமனைக்கு வரும்போது டாக்டர்கள் இல்லாததால் உயிரிழப்புகள் தொடர்த்து ஏற்படுகிறது. கர்ப்பிணிகள் இரவு நேரத்தில் பிரசவத்திற்கு வரும்போது மருத்துவம் பார்க்க மருத்துவர்கள் இல்லாததாலும், போதிய வசதிகள் இல்லாததாலும் பையர்நத்தம் அல்லது பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்றி கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள், கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுடன் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு செயலாளர் ப.ஜெபசிங் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
- பா.ஜெபசிங் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை - நாம் தமிழர் கட்சி
