இராணிப்பேட்டை அக்டோபர் 05 |புரட்டாசி 19
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 ஆவது ஆண்டு புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.இந்த புத்தகத் திருவிழாவை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்து ரூ.163 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், பள்ளி கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் 60 க்கும் மேற்பட்ட புத்தக அரங்கங்கள் கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட 4 ஆவது மாபெரும் புத்தகத் திருவிழா 2025 ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 10 நாட்களை நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் பூத்தகத் திருவிழாவை கைத்தறி மற்றும் துணிநூல் துறை காந்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பதிப்பாளர்களின் புத்தக அரங்கங்களை பார்வையிட்டார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம், உள்ளிட்ட துறைகளின் சார்பில் 107 பயனாளிகளுக்கு ரூ.163 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு மாணவ மாணவியர்கள், பொதுமக்களிடம் புத்தகம் வாசிப்பை அதிகரித்திடவும், அதன் முக்கியத்துவத்தை உணர்த்தவும் புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல புத்தக கண்காட்சிகளை மாவட்டந்தோறும் நடத்த ஆணையிட்டார்.
அதனடிப்படையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. பெரியநகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த இப்புத்தக கண்காட்சிகள் தற்போது மாவட்டந்தோறும் நடத்தப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வர்களான அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆகியோர் பொதுமக்களுக்கு என்னென்ன செய்ய நினைத்தார்களோ அதனை நமது முதல்வர் ஒவ்வொன்றாக மகத்தான திட்டங்கள் வாயிலாக செயல்படுத்தி வருகின்றார்.கல்விக்கும் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து இந்தியாவிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கல்வியிலும் சுகாதாரத்திலும் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களின் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.ஒருமனிதனுக்கு சிந்திக்கின்ற ஆற்றலானது படிப்பதால் மட்டுமே பெறமுடியும்.ஆதலால் புத்தகவாசிப்பின் அவசியத்தை சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும். உங்கள் பிள்ளைகளை நூலகத்திற்கு அழைத்துச் சென்று படித்து பழக்குங்கள். அறிவாற்றலுடன் கூடிய நல்ல புத்தகங்களை உங்கள் பிள்ளைகளுக்கு வாங்கிகொடுங்கள். மக்களின் வாசிப்பு பழக்கம் மேம்படவும், மாணவ, மாணவியரின் படிக்கும் ஆர்வம் உயரவும் இப்புத்தக கண்காட்சி உதவியாக இருக்கும் என்றார்.
இதில் மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால்,மாவட்ட வருவாய் அலுவலர் செ.தனலிங்கம் நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத் மாவட்ட நூலகர் கணேசன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகி லோகநாதன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

