அக்டோபர் 16|புரட்டாசி 30
அன்பு மகளே ஹாசினி
எங்களை மன்னித்துவிடு...!
சின்னுஞ்சிறு குழந்தை ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த வழக்கில் உயர்நீதிமன்றத்தால் குற்றாவாளியென உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட கொடூரன் தஷ்வந்தை, உச்சநீதிமன்றம் போதிய சான்றுகள் இல்லையென்று, விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளதை எண்ணி நெஞ்சம் வெதும்புகிறது.
பிணையில் வெளிவந்து பெற்ற தாயையே கொன்ற கொடூரன், இக்கொடுங்குற்றத்தை புரிந்திருக்கமாட்டான் என்று மாண்பமை உச்சநீதிமன்றம் முடிவுக்கு வந்ததுதான் ஏற்றுக்கொள்ளவே முடியாத மனவலியைத் தருகின்றது. நீதி முகமையின் கூட்டு மனச்சாட்சி இப்போது ஏன் சலனம் ஏதுமின்றி மௌனித்தது என்ற கேள்வி எழுகிறது.
மரண தண்டனை கூடாது என்பதே மானுடம் போற்றும் அனைவரின் ஒருமித்த நிலைப்பாடாகும். என்றாலும், ஒட்டுமொத்த மானுடச் சமூகமும் வெட்கித் தலைகுனியவும், வேதனையில் நெஞ்சு வெடிக்கவும் செய்கின்ற வகையில் சின்னஞ்சிறு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, ஈவு இரக்கமின்றி கொலை செய்வது போன்ற கொடுங்குற்றங்களுக்கு மரணத்தை தவிர வேறு எதனை தண்டனையாகத் தர முடியும்? அதிலும் மிருகங்கள்கூட ஈன்ற தாயை கொன்றுவிடும் அளவிற்கு கொடூரமாய் இருப்பதில்லை. அக்கொடுஞ்செயலை புரிந்த கொடியவன் தஷ்வந்த் தீர்ப்பின் மூலம் விடுதலையாகி சமூகத்தில் சுதந்திரமாக உலவுவது என்பது, எத்தகைய கொடுங்குற்றத்தை புரிந்தாலும் எளிதில் விடுதலையாகிவிடலாம் என்ற எண்ணத்தை தஷ்வந்த் வயதையொத்த இளைஞர்களிடம் ஏற்படுத்திவிடாதா?
சமகாலத்தில் நிரம்பி வழிகிற திரவ மது, தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா, அபின், கோகைன் உள்ளிட்ட திடப் போதைப்பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளந்தலைமுறை பிள்ளைகளிடம், 'எளிதில் விடுதலை' எனும் இதுபோன்ற தீர்ப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை எண்ணும்போதே நெஞ்சம் பதறுகிறது. இத்தீர்ப்புகள் மூலம் எதிர்கால குழந்தைகளுக்கு எத்தகைய கொடிய சமூகத்தை நாம் கட்டமைக்கிறோம் என்பதை நினைக்கும்போது பெரும் அச்சம் மேலிடுகிறது. எத்தகைய கொடிய குற்றத்தையும், செய்யுங்கள் ஆனால், சாட்சிகள் ஏதும் இல்லாமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்! என்பதைத்தானே இத்தகைய தீர்ப்புகள் நீண்டகாலமாக நமக்கு உணர்த்தி வருகிறது. இதுபோன்ற தீர்ப்புகள் நாட்டில் நடக்கும் குற்றங்களை மேலும் பன்மடங்கு அதிகரிக்க வழி ஏற்படுத்திவிடாதா? குற்றங்களையும் தடுக்க முடியவில்லை; குற்றவாளிகளுக்கு தண்டனையும் தர முடியவில்லை என்றால் சட்டத்தை மதித்து நடக்கும் சாமானிய குடிமகனுக்கு இந்த நாட்டின் மீதும், அரசின் மீதும், நீதியமைப்பின் மீதும் எப்படி நம்பிக்கை வரும்? இதுபோன்ற அநீதிகளே பெரும் புரட்சிகளுக்கு வித்திடும் அடிப்படைக் காரணம் என்பதை நாட்டின் ஆட்சியாளர்களும், உச்ச அதிகாரத்தில் உள்ளவர்களும் எப்போது உணரப்போகிறீர்கள்?
மரண தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனை அளிக்கும் அளவிற்குக்கூட தமிழ்நாடு காவல்துறையால் தடயங்கள் திரட்டி சான்றுகளை சமர்பிக்க முடியவில்லை; முற்று முழுதாக தஷ்வந்த் விடுதலை செய்யும் அளவிற்கு திராவிட மாடல் காவல்துறை மிக மோசமாக செயலாற்றியுள்ளது என்றால், இந்த அரசும் காவல்துறையும் யாருக்கானது? சாமானிய மக்களுக்கானதா? அல்லது சமூக விரோதிகளுக்கானதா?
அன்புமகள் ஹாசினி கொல்லப்பட்ட கொடுந்துயரம் நிகழ்ந்த பிறகு ஹாசினியின் பெற்றோருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நேரத்தில் அப்பெற்றோர்களின் துயரம் தோய்ந்த கதறல், என் இதயத்தில் ஏற்படுத்திய வேதனையை வார்த்தைகளில் கூறிவிட முடியாது. வீட்டருகே சிறுமியை விளையாடுமாறு விட்டுச்சென்ற சின்னஞ்சிறு குழந்தையை, வன்கொடுமை செய்து கொன்று எரித்த செய்தி, மனச்சான்று உள்ள ஒவ்வொரு மனிதனின் குருதியையும் கொதிப்புறச் செய்யும் கொடூரமாகும்.
ஆனால், அக்கொடிய குற்றத்தை புரிந்த தஷ்வந்த் 30 நாட்களில் பிணையில் வெளிவந்ததுதான் அதைவிடவும் பெருங்கொடுமையாகும். அப்படி அலட்சியமாக விடுவித்ததுதான் பெற்ற தாயையே தஷ்வந்த் கொன்றதற்கு காரணமாகும். அத்தாயின் கொலைக்கு யார் பொறுப்பேற்பது? தாயை கொன்றதை நீதிமன்றத்தில் தஷ்வந்த் ஒப்புக்கொண்ட பிறகும் அக்கொடியவனின் கொடூர மனத்தை கருத்திற்கொள்ளாது மீண்டும் நீதிமன்றம் தற்போது விடுதலை செய்துள்ளது? மீண்டும் ஹாசினி போன்றொரு இன்னொரு குழந்தை கொல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இந்த நாடா? ஆட்சியாளர்களா? நீதிமன்றமா? சட்டமா? காவல்துறையா? யார் பொறுப்பேற்பீர்கள் நியாயமாரே?
குற்றஞ்சாட்டப்பட்ட தஷ்வந்த் குற்றவாளி அல்ல என்று விடுதலை தீர்ப்பாகிவிட்டது என்றால் அன்புமகள் ஹாசினியை கொன்றது யார் என்ற கேள்விக்கு எவரிடத்தில் பதிலுண்டு? தங்கள் பிஞ்சு குழந்தையை இழந்து இத்தனை ஆண்டுகளாக காயம்பட்டு கிடக்கும் ஹாசினியின் பெற்றொருக்கு என்ன மருந்திட்டு ஆறுதல் சொல்வது? ஹாசினியின் பெற்றொருக்கு இதற்கு மேலும் என்ன நீதியை நாம் பெற்றுத் தரப்போகிறோம்? எப்போது தரப்போகிறோம்? அவர்களின் குழந்தையும் இல்லை. அதற்கான நீதியும் இல்லை. ஹாசினியின் ஆன்மாவினை எதைச்சொல்லி ஆற்றுப்படுத்தப் போகிறோம்?
அன்பு மகளே ஹாசினி
எங்களை மன்னித்துவிடு...!
- சீமான் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்.



