அக்டோபர் 11|புரட்டாசி 25
தமிழ்நாடு
மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்தில் கட்டணம் இல்லை – தமிழக அரசின் அறிவிப்பு:
Free travel for disabled : தமிழகத்தில் மலைப்பகுதிகளில் சாதாரண கட்டண பேருந்துகளில் இனி மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கு துணையாக வருபவருக்கும் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் இந்த திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியது. இதற்காக பிர்தேயகமாக பிங்க் நிறத்தில் பேருந்துகள் விடப்பட்டன. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் மிகவும் பயனடைந்தனர். குறிப்பாக தினமும் மார்க்கெட் சென்று வருபவர்களுக்கும் இந்த பேருந்து பயனுள்ளதாக இருந்தது. இலவசம் என பெண்கள் விமர்சிக்கப்படுவதாக ஒரு பக்கம் புகார்கள் எழுந்தாலும் பெரும்பாலான மக்கள் இதனால் மிகவும் பயனடைந்தனர். இந்த நிலையில் மற்றொரு அதிரடி அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் படி, மலைப்பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் அரசாணை வெளியிட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசு அக்டோபர் 10, 2025 அன்று புதிய அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது. அதன் படி மலைப்பகுதிகளில் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தி அறிவித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அவருக்கு துணையாக வரும் ஒருவரும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யலாம். இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அவருடன் பயணிப்பவர்களுக்கும் கட்டணமில்லா பயணம் அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அன்றே பெண்களுக்கு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்துக்கு கையெழுத்திட்டார். இந்த திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை போர்டு பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். பெண்கள் மட்டும் இல்லாமல் திருநங்கைகளும் இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது.
மற்ற மாநிலங்களில் தொடங்கப்பட்ட கட்டணமில்லா பேருந்து திட்டம்
இந்த திட்டத்துக்கு நாடு முழுவதும் வரவேற்பு கிடைத்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டமன்ற தேர்தலின்போது, கட்டணமில்லா பேருந்து என்ற வாக்குறுதியை அளித்தது. இந்த நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் சக்தி என்ற பெயரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது.
இந்த நிலையில் தெலங்கானாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகாலட்சுமி என்ற பெயரில் கட்டணமில்லா பேருந்து சேவையைத் தொடங்கி வைத்தார். இதனால் அம்மாநில பெண்களும் இந்த திட்டத்தால் மிகவும் பயனடைந்தனர். அந்த வகையில் தமிழக அரசு இந்த திட்டத்தில் முன்னோடியாக உள்ளது.

