நவம்பர் 29|கார்த்திகை 13
சென்னை
கோயம்பேடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக தாஹிரா பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், காதலனால் ஏமாற்றப்பட்டு, கர்ப்பமடைந்த பெண் ஒருவர் இவரிடம் புகார் அளிக்க வந்ததாகவும், புகாரில் விசாரணை மேற்கொள்வதாக கூறி அவரது கையில் மருத்துவ செலவுக்காக இருந்த ரூ.1,500 ஆய்வாளர் தாஹிரா வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், புகார் அளிக்க வந்த பெண் மேற்கு மண்டல இணை ஆணையர் திஷா மிட்டலை சந்தித்து, தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கையில் இருந்த பணத்தை ஆய்வாளர் தாஹிரா நடவடிக்கை எடுப்பதாக வாங்கிக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். உடனடியாக இணை ஆணையர் உண்மையை கண்டறிய, பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து ஆய்வாளருக்கு செல்போனில் அழைத்துப் பேச வைத்துள்ளார்.
“தனது குடும்பச் செலவுக்கு இருந்த பணத்தை நீங்கள் வாங்கிக் கொண்டீர்கள்; அதை கொடுத்து விடுங்கள் மேடம்” என்று கேட்டதற்கு, “நீ என்ன கொடுத்த பணத்தை கேட்கிறாய்” என ஆய்வாளர் அதற்கு பதில் அளித்ததாகவும், மறுமுனையில் இருந்த இணை ஆணையர் திஷா மிட்டல், உண்மையை தெரிந்து கொண்டு உடனடியாக ஆய்வாளர் தாஹிராவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது.

